இலங்கை அமைச்சரின் அறிவிப்புக்கு ராமேசுவரம் மீனவர்கள் கண்டனம்

இலங்கை அமைச்சரின் அறிவிப்புக்கு ராமேசுவரம் மீனவர்கள் கண்டனம்

எல்லைதாண்டி மீன்பிடித்தால் ரூ. 20 லட்சம் அபராதம் விதிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது என்ற இலங்கை அமைச்சரின் அறிவிப்புக்கு ராமேசுவரம் மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Published on

ராமேசுவரம்:

ராமேசுவரம் அருகே உள்ள கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாகவும், போதை பொருட்களை கடத்தியதாகவும் கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வதும், தாக்குவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படாததால் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர நேற்று கொழும்பில் நிருபர்களிடம் கூறுகையில், இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை அபராதம் விதிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக தனி குழு அமைக்கப்பட்டு புதிய சட்ட விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஒரு வாரத்திற்குள் இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்றார்.

இலங்கை அமைச்சரின் இந்த அறிவிப்பு ராமேசுவரம் மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மீனவர் சங்க தலைவர்கள் போஸ், தேவதாஸ் கூறுகையில், இலங்கை கடற்படை ஏற்கனவே 60 தமிழக மீனவர்களையும், 160-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும் சிறைபிடித்து சென்றுள்ளது.

மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய-மாநில அரசை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

இதற்கு தீர்வு காணாத நிலையில் இலங்கை அமைச்சரின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இலங்கை அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றினால் இந்திய-இலங்கை நாடுகளின் நல்லுறவில் பாதிப்பு ஏற்படும். எனவே இந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என இலங்கை அரசிடம் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com