நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.
நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படையினர் நடவடிக்கை
Published on

ராமேசுவரம்:

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக 6 குட்டி கப்பல்களில் 30-க்கும் மேற்பட்ட இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர். அவர்கள் தமிழக படகுகளை கண்டதும் அங்கிருந்து செல்லும்படி எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்குள் வீசியிருந்த வலைகளை அவசரம், அவசரமாக எடுத்துக்கொண்டு கரைக்கு திரும்ப முயன்றனர்.

ஆனால் அதற்குள் ஒரு சில படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் அந்த படகுகளுக்குள் இறங்கி மீனவர்களை தாக்கியதுடன், அதில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் கடலில் வீசி எறிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மீனவ சங்க நிர்வாகிகள் கூறும்போது, “தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தொல்லை இல்லாமல் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com