

திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, சோலார் பேனல் மோசடி புகார்கள் கிளம்பியது.
இந்த மோசடியில் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் அப்போதைய முதல்-மந்திரி உம்மன்சாண்டிக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. எனவே ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்த கமிஷன் சோலார் பேனல் நிறுவனத்தை தொடங்கிய பெண் தொழில் அதிபர் சரிதாநாயர், அப்போதைய முதல்-மந்திரி உம்மன்சாண்டி உள்பட பலரிடம் விசாரணை நடத்தியது. சாட்சிகள் விசாரணை முடிந்து அறிக்கை தயாராகும் முன்பே கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
காங்கிரஸ் ஆட்சியை இழந்து கம்யூனிஸ்டு கூட்டணி பதவிக்கு வந்தது. அதன் பிறகே விசாரணை கமிஷன் அறிக்கை தயாராகி அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கை நேற்று கேரள சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. 1073 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கை அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும், ஊடகங்களுக்கும் அளிக்கப்பட்டது.
அறிக்கையில், முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி, அவரது மந்திரிசபையில் இடம் பெற்றவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பலர் மீது பாலியல் புகார்கள் கூறப்பட்டிருந்தன. இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அறிக்கை வெளியானதும் கேரள எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான ரமேஷ் சென்னிதலா கடுமையாக விமர்சனம் செய்தார். சரிதாநாயர் வேண்டுமென்றே புகார்களை கூறி இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சரிதா நாயர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சோலார் பேனல் மோசடி விவகாரம் வெளியானதும், இதில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக நான் கூறினேன். முதல்-மந்திரி உம்மன்சாண்டியும், அவரது அலுவலக ஊழியர்களும் என்னை சந்தித்ததாகவும் தெரிவித்தேன்.
அப்போது அவர்கள் என்னை பார்க்கவே இல்லை என்று சத்தியம் செய்தனர். ஆனால் இன்று என்னை பார்த்ததையும், பேசியதையும் ஒப்புக் கொள்கிறார்கள்.
இன்று என்னை கடுமையாக விமர்சிக்கும் ரமேஷ் சென்னிதலாவும் அப்போது என்னிடம் பேசி உள்ளார். இதற்காக அவரது உதவியாளர் என்னை சந்தித்தார். அவரது போனில் இருந்து என்னிடம் ரமேஷ் சென்னிதலா பேசினார்.
கேரளாவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு காங்கிரஸ் கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் தேர்வு நடந்து கொண்டிருந்தபோது தான் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது சென்னிதலா என்னிடம், உம்மன்சாண்டிக்கு எதிரான ஆதாரங்கள் எதுவும் இருந்தால் உடனே அதனை பகிரங்கமாக வெளியிட வேண்டும்.
காங்கிரஸ் மேலிடம் முதல்-மந்திரி வேட்பாளரை அறிவிக்கும் முன்பு இந்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று என்னை வற்புறுத்தினார். கட்சியினர் மீதும் உம்மன்சாண்டி மீதும் அவருக்கு இருந்த அக்கறையை இதன் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளலாம். இப்போது கட்சியை காப்பாற்ற வந்தவர்போல் பேசுகிறார்.
என்னிடம் இருந்து அரசியல் பிரமுகர்கள் பலரும் பணம் வாங்கி உள்ளனர். ஒவ்வொரு காரியத்திற்கும் என்னிடம் பணம் பெற்றுள்ளனர். ஆனால் நான் யாரிடமும் பணம் வாங்கியதில்லை. பொதுமக்களிடம் திரட்டிய பணம் அரசியல்வாதிகளுக்கு தான் சென்றது.
நான் கூறிய பாலியல் புகார்கள் உண்மையே. பாலியல் குற்றச்சாட்டு கூறிய எந்த பெண்ணும் அது தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை தாக்கல் செய்தது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.