

அரியானா மாநிலம் சிர்சா பகுதியில் செயல்படும் தேரா சச்சா சவுதா என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம்ரகீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளியாக நேற்று அறிவிக்கப்பட்டார். பஞ்சாப் சிபிஐ சிறப்பு கோர்ட்டின் நீதிபதி ஜகதீப் சிங் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை கடும் நெருக்கடிகளுக்கு இடையே அளித்தனர். அவருக்கான தண்டனை விவரம் 28-ந்தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இந்த தீர்ப்பை கேட்டதும் குர்மீத் ராமின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். 350-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதற்கிடையே ஆசிரமம் உள்ள சிர்சா பகுதியிலும் கலவரம் வெடித்தது. பஞ்சாப், அரியானாவில் ஏற்பட்ட கலவரம் நேரம் செல்லச் செல்ல ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களுக்கும் பரவியது.
கலவரத்தால் அரியானா மாநிலம் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மின்சார நிலையத்துக்கும் தீவைக்கப்பட்டது. கலவரம் காரணமாக 5 மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இன்று காலையில் கூடுதல் ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 80 சதவீத பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது இல்லை. அங்கு தடை உத்தரவும் போடப்பட்டது இல்லை. இப்போது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 11 மாவட்டங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளது. ஒரு இடத்தில் கலவரம் ஏற்பட்டால் அடுத்த 13 நிமிடங்களில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு கலவரத்தை கட்டுப்படுத்தி வருகிறார்கள். தற்போது விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5 மாநிலங்களில் கலவரம் நீடித்து வருவதால் அதை கட்டுப்படுத்தும் முயற்சியில் போலீசார் முழுமையாக இறங்கியுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்ட 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் பொதுக்கூட்டம் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு மேல் கூடி நிற்கக்கூடாது. பேனர் வைக்கக் கூடாது. ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது. கோஷம் எழுப்பக் கூடாது, ஊர்வலமாக செல்லக் கூடாது, தர்ணா போராட்டம் நடத்தக் கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்பில் உள்ள 10 மாவட்டங்களில் 85 கம்பெனி ராணுவம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது.