சி.பி.ஐ. முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா துபாயில் என்னை மிரட்டினார் - கிறிஸ்டியன் மைக்கேல்

சி.பி.ஐ. முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா துபாயில் தன்னை மிரட்டியதாக வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் பேர ஊழலில் கைதான இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் டெல்லி கோர்ட்டில் இன்று தெரிவித்தார். #RakeshAsthana #ChristianMichel
சி.பி.ஐ. முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா துபாயில் என்னை மிரட்டினார் - கிறிஸ்டியன் மைக்கேல்
Published on

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
 
இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் என்பவர் துபாயில் இருந்ததால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
 
இதைதொடர்ந்து, கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த 22-12-2018 அன்று துபாயில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து டெல்லிக்கு அழைத்து வந்தனர்.

சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மூன்றுமாத காலமாக அடுத்தடுத்து ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.

அகஸ்ட்டா வெஸ்ட்லேன்ட் நிறுவனத்திடம் இருந்து இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் சுமார் 225 கோடி ரூபாய் கமிஷனாக பெற்றதாக அவரே வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது, அவர் டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

திகார் சிறையில் உள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் கிறிஸ்டியன் மைக்கேலை காஷ்மீர் பயங்கரவாதிகள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் அடைத்துள்ளதாகவும், இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் சி.பி.ஐ. சிறப்பு நீதிபதியிடம் நேற்று தெரிவித்தார்.

இதற்கிடையில், திகார் சிறையில் இருக்கும் கிறிஸ்டியன் மைக்கேலிடம் சிறைக்கு சென்று மேற்கொண்டு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் கிறிஸ்டியன் மைக்கேல் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிறையில்படும்  அவதிகள் தொடர்பாக அவர் வாக்குமூலம் அளித்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் சி.பி.ஐ. முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா துபாயில் என்னை சந்தித்து ‘உன் வாழ்க்கையை நரகமாக்கி விடுவேன்’ என்று மிரட்டி இருந்தார். தற்போது திகார் சிறையில் நடப்பதை வைத்துப் பார்க்கும்போது அவர் கூறியதன் அர்த்தம் புரிகிறது என மைக்கேல் வாக்குமூலம் அளித்தார்.

இதைதொடர்ந்து, எந்த சூழ்நிலையில் உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதிக்கு கிறிஸ்டியன் மைக்கேல் மாற்றப்பட்டார்? என்பது தொடர்பாக சிறையில் உள்ள வீடியோ பதிவுகளை கோர்ட்டில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, திகார் சிறைக்குள் நாளையும், நாளை மறுநாளும் காலையில் அரைமணி நேரம், மாலையில் அரைமணி நேரம் மைக்கேல் கிறிஸ்டியனிடம் அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com