

புதுடெல்லி:
மராட்டியம் மாநிலம் புனேவில் நேற்று இரு தரப்பினருக்கு இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாகியுள்ள நிலையில், இன்று அங்கு முழு அடைப்புக்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. மேலும், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் சூழலில் புனே கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என பல கட்சிகளின் எம்.பி.க்கள் ஒத்தி வைப்பு நோட்டீஸ் கொடுத்தனர். மாநிலங்களவையில் இடதுசாரி கட்சிகள் கொடுத்த ஒத்திவைப்பு நோட்டீஸ் ஏற்கப்பட வில்லை. மேலும், இது தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
ஆனால், சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இதனால், அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. தொடர்ந்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவைவை மதியம் 12 மணிவரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதனால், முத்தலாக் மசோதா பிற்பகலில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க எம்.பி,க்கள் கூட்டம் நடந்தது. அதில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கமிஷனுக்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிப்பதற்கான சட்டத்திருத்த மசோதா மற்றும் முத்தலாக் மசோதா தொடர்பாக விவாதிக்கப்பட்டது.