எதிர்க்கட்சியினர் தொடர் அமளி - மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றத்தின் மாநிலங்களவை இன்றும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #BudgetSession #RajyaSabha #Adjourned
எதிர்க்கட்சியினர் தொடர் அமளி - மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு கடந்த வாரம் திங்கட்கிழமை தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கூட்டத்தொடரில் காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பி.என்.பி. வங்கி மோசடி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. 

இன்று காலை மாநிலங்களவை வழக்கம்போல் கூடியது. அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து வந்து அவையின் மையப்பகுதிக்கு சென்றனர். அவர்கள் தங்கள் கைகளில் அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை எடுத்துச் சென்று கோஷங்கள் எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால், சபாநாயகர் வெங்கையா நாயுடு அவையை மதியம் 2.30 மணி வரை ஒத்திவைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவையை முடக்கி வருவது வேதனை தருகிறது. கடந்த இரு வாரங்களாக எந்த வேலையும் நடக்கவில்லை. எனது பொறுமையை சோதிக்காதீர்கள். நீங்கள் விளக்கம் கேட்கும் விஷயங்கள் தொடர்பாக அரசு நிச்சயம் பதிலளிக்கும். அடுத்த வாரம் அவை பணிகள் அமைதியாக நடக்க ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், மதியம் 2.30 மணிக்கு பிறகு மாநிலங்களவை கூடியது. அப்போதும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அவை மீண்டும் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #BudgetSession #RajyaSabha #Adjourned  #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com