

புதுடெல்லி:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ராஜேஸ்(34) என்ற ஆர்.எஸ்.எஸ் தொண்டர் நேற்று இரவு மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலைக்கி பின்னணியில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது என பா.ஜ.க. குற்றச்சாட்டியுள்ளது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டை மார்க்சிஸ்ட் கட்சி மறுத்துள்ளது.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார்.
அப்போது, கேரளாவில் அரசியல் ரீதியான படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், ஜனநாயகத்தில் அரசியல் படுகொலைகளை ஏற்றக்கொள்ள முடியாது என்று கூறினார்.
இதனிடையே, ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கொலையை கண்டித்து பா.ஜ.க. சார்பில் இன்று கேரளாவில் மாநிலம் தழுவிய முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.