ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பரோல் வழங்கக்கோரி மனு: உள்துறைச் செயலாளருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் பரோல் வழங்கக்கோரிய மனு குறித்து உள்துறைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பரோல் வழங்கக்கோரி மனு: உள்துறைச் செயலாளருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
Published on

மதுரை:

மதுரை சிறையில் உள்ள ரவிச்சந்திரன், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். இந்த 25 ஆண்டு சிறை வாசத்திற்கு இடையே 3 முறை பரோல் விடுமுறை எனக்கு வழங்கப்பட்டது.

தற்போது குடும்ப சொத்து பாகப்பிரிவினைக்காக ஒரு மாதம் சாதாரண பரோல் வழங்கக்கோரி மனு அளித்தேன். ஆனால் ராஜீவ்கொலை வழக்கில் பாஸ்போர்ட் சட்டம், தொலைத்தொடர்பு சட்டம் என 2 சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி, எனக்கு பரோல் வழங்க சிறைத்துறை அதிகாரிகள் மறுத்து உத்தரவிட்டுள்ளனர்.

ராஜீவ் கொலை வழக்கில் நான் 16-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளேன். என் மீது கூட்டுச்சதி, கொலை என 2 பிரிவுகளின் கீழ் பதிவான வழக்கின் அடிப்படையில் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. எனவே பாஸ்போர்ட் சட்டம், தொலைத்தொடர்பு சட்டம் ஆகியவை என்னை கட்டுப்படுத்தாது.

மேலும் கடந்த 2014-ம் ஆண்டு ராஜீவ்காந்தி கொலை கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக 3 நாளில் முடிவெடுக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டு ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த சமயத்தில் மாநில அரசு எடுத்த முடிவின் அடிப்படையில் எனக்கு நீண்ட நாள் அல்லது ஒரு மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கு குறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் (சிறை), சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், ஜனவரி மாதம் 8-ந்தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com