ரஜினி அரசியலுக்கு வரக்கோரி திருச்சியில் மாநாடு: ரசிகர்கள் திரண்டதால் உளவுத்துறை கண்காணிப்பு

திருச்சியில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ரஜினியின் அரசியல் பிரவேசம் அவசியமா? என்ற தலைப்பில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடக்கிறது.
ரஜினி அரசியலுக்கு வரக்கோரி திருச்சியில் மாநாடு: ரசிகர்கள் திரண்டதால் உளவுத்துறை கண்காணிப்பு
Published on

திருச்சி:

திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ரஜினியின் அரசியல் பிரவேசம் அவசியமா? என்ற தலைப்பில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு மற்றும் ஆய்வுரை பொதுக்கூட்டம் நடக்கிறது.

இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கணேசன் தலைமையில் பொதுக் கூட்டத்தில் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் பங்கேற்று பேசுகிறார். இதில் பட்டிமன்றமும் நடைபெறுகிறது.

திருச்சியில் நடைபெறும் காந்திய மக்கள் இயக்கத்தின் பொதுக்கூட்டத்தில் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து விவாதிக்கபட உள்ளது. இதனால் இந்த மாநாட்டில் ரஜினி ரசிகர்கள் திரளாக பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ரஜினி மன்ற நிர்வாகிகளை சந்தித்து காந்திய மக்கள் இயக்கத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் வெளிமாவட்டங்களில் இருந்து இக்கூட்டத்தில் பங்கேற்க ரஜினி ரசிகர்கள் திருச்சிக்கு புறப்பட்டனர். ரஜினி ரசிகர்களை வரவேற்று திருச்சி முழுவதும் ரஜினி ரசிகர்கள் விதவிதமான போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். இந்த கூட்டம் குறித்து காந்திய மக்கள் இயக்கத்தினர் ரஜினியிடமும் அழைப்பிதழ் கொடுத்துள்ளனர். ரசிகர்கள் பங்கேற்பது குறித்து ரஜினி தடை ஏதும் விதிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ரசிகர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். மாநாடு நடைபெறும் உழவர் சந்தை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் காந்தி, காமராஜர் ஆகியோரது படங்களுடன் ரஜினிகாந்த், தமிழருவி மணியன் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. மதுவற்ற மாநிலம், உண்மையாக இருப்போம், ஊழலற்ற தமிழகம் அமைப்போம் என வாசகங்கள் மேடை முகப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

ரஜினி மன்ற நிர்வாகிகள் தங்கள் மன்றத்தின் பலத்தை காட்டும் வகையில் எந்தெந்த ஊர்களில் இருந்து வந்துள்ளோம் என்பதை பேனர்களுடன் மாநாட்டில் திரண்டு வருகிறார்கள்.

திருச்சி மாநாட்டில் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்களிடம் கருத்து கேட்டு அவர்கள் மத்தியில் அரசியல் பணிக்கு ரஜினி வர வேண்டியதின் அவசியத்தை விளக்கும் விதமாகவே அனைத்து நிகழ்ச்சிகளும் நடப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 25 வருடங்களாக ரஜினி அரசியல் பிரவேசத்தை எதிர்பார்த்து காத்து ஏமாந்த ரஜினி ரசிகர்களுக்கு இந்த மாநாடு புதிய நம்பிக்கையை கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுவரை ரசிகர்களால் மட் டுமே எதிர்பார்க்கப்பட்டு வந்த ரஜினியின் அரசியல் பிரவேசம் தற்போதைய சூழ்நிலையில் தமிழக மக்களாலும் எதிர்பார்க்கப்படுவதாக ரசிகர்கள் தெரிவித்தனர். மக்கள் மனதின் மாற்றத்திற்கான உந்து சக்தியாக இந்த மாநாடு அமையும் என்றும் அவர்கள் கூறினர்.

இது தொடக்கம்தான் என கூறியுள்ள ரசிகர்கள் டிசம்பரில் திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதற்கிடையே ரஜினி ரசிகர்களின் மாநாடு குறித்து திருச்சியில் உளவுத்துறை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மாநாட்டு பணிகள் தொடர்பாக தமிழருவி மணியன் 2 நாட்களுக்கு முன்பே திருச்சிக்கு வந்திருந்து பணிகளை பார்வையிட்டு வருகிறார்.

மாநாட்டை உளவுத்துறை போலீசார் கண்காணிப்பது போல அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கண்காணித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com