அரசு ஊழியர்கள் மீதான புகார்களை விசாரிக்க தடை: ராஜஸ்தான் அவசர சட்டத்துக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. எதிர்ப்பு

அரசு ஊழியர்கள் மீதான புகார்கள் வந்தால் அதுபற்றி விசாரிப்பதற்கு அரசு அனுமதி பெற வேண்டும் என்ற அவசர சட்டம் கருப்பு சட்டம் என பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் மீதான புகார்களை விசாரிக்க தடை: ராஜஸ்தான் அவசர சட்டத்துக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. எதிர்ப்பு
Published on

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தர ராஜே சிந்தியா தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு புதிய அவசர சட்டம் ஒன்று கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்தின்படி நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள் மீது புகார்கள் வந்தால் அது பற்றி விசாரிப்பதற்கு அரசு அனுமதி பெற வேண்டும்.

மேலும் அரசு ஊழியர்கள் மீது ஊழல் புகார் வந்தால் அவர்கள் குற்றவாளி என நிரூபித்ததற்கு பிறகுதான் பத்திரிகைளில் அவர்களை பற்றியும், அவர்கள் குடும்பத்தை பற்றியும் செய்திகளை வெளியிட வேண்டும், அதை மீறி முன்கூட்டியே செய்தி வெளியிட்டால் 2 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்படும் என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும், பல்வேறு சமூக அமைப்புகளும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் அதையும் மீறி நேற்று சட்டசபையில் இந்த சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. உள்துறை மந்திரி குலாப்சந்த் கட்டாரியா சட்டத்தை தாக்கல் செய்தார். அதை எதிர்த்து சட்டசபையில் காங்கிரஸ் கட்சி அமளியில் ஈடுபட்டது. இதனால் சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. ஒருவரே இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். கட்சியில் மூத்த எம்.எல்.ஏ.வான கணேஷ்சியாம் திவாரி சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அவர் கூறும்போது, இது ஒரு கருப்பு சட்டம், எனவே நான் எதிர்க்கிறேன் என்று கூறினார்.

இதற்கிடையே அவசர சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் மாநில தலைவர் சச்சின் பைலட் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியினர் நகரில் ஊர்வலமாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தானில் கொண்டு வரப்படும் இந்த சட்டத்துக்கு மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி கூறும்போது, அரசு பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது வரும் புகார்களில் 73 சதவீதம் தவறானவை. எனவே தான் இதுபோன்ற சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com