ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் - வாலிபர் பலி

ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் வாலிபர் பரிதாபமாக பலியானார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் அருகே காஞ்சிரவிளையை சேர்ந்தவர் சிவா(வயது 36). இவர், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள தனியார் கேன்டீனில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை சிவா ராஜாக்கமங்கலத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பருத்திவிளை பகுதியில் செல்லும் போது, எதிரே வைராகுடியிருப்பு பகுதியை சேர்ந்த ஹரி (22) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் நின்றவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சிவா பரிதாபமாக இறந்தார். ஹரிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார்சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் இறந்த சிவாவுக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com