

சென்னை:
தமிழக கவர்னராக கடந்த மாதம் 6-ந்தேதி பதவியேற்ற பன்வாரிலால் புரோகித் அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை கோவை சென்ற அவர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கவர்னர் பன்வாரிலால் தன்னிச்சையாக செயல்படுவது, மத்திய அரசு நேரடியாக தமிழகத்தில் தலையீடுவது போல உள்ளது என்ற விமர்சனமும் எழுந்தது. இதை கண்டு கொள்ளாத கவர்னர் மறுநாள் கோவை பஸ் நிலையத்தை ஆய்வு செய்தார். குப்பைகளையும் அள்ளினார்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘களத்துக்கு சென்று ஆய்வு செய்தால்தான் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்’’ என்றார். இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே கவர்னர் மாளிகை பணிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலும் கவர்னர் பன்வாரிலால் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் திறமைசாலிகளை தேடிப்பிடித்து அழைத்து வரத்தொடங்கியுள்ளார்.
அந்த வகையில் தனது முதன்மை செயலாளராக மத்திய அரசின் மிக உயர் பதவியில் இருக்கும் ஆர்.ராஜகோபாலை பெற திட்டமிட்டுள்ளார். ஆர்.ராஜகோபால் தமிழ்நாட்டை சேர்ந்த 1984-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.
கடந்த 2015-ம் ஆண்டு முதல் அவர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் செயலாளராக உள்ளார். அவர் தமிழக அரசு பணிக்கு திரும்பி வர இருப்பதாக இங்குள்ள உயர் அதிகாரிகளிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முந்தைய ஜெயலலிதா ஆட்சியின் போது இவர் முதலில் உள்துறையில் இருந்தார். பிறகு அவர் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்துக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து 2014-ம் ஆண்டு அவர் தமிழக அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு மத்திய அரசு பணிக்கு சென்றார். வேளாண் ஆராய்ச்சித் துறையில் கூடுதல் செயலாளராக இருந்த அவர் பிறகு உள்துறைக்கு வந்தார்.
மத்திய அரசு பணியின் காலம் இன்னும் முடிவடையாத நிலையில் அவர் மீண்டும் தமிழ்நாட்டுக்கு கவர்னரின் முதன்மை செயலாளராக வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கவர்னரின் செயலாளர் பணி தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியாக கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு, அரசியல் சூழ்நிலை மற்றும் மேம்பாட்டு திட்டப்பணிகள் குறித்து மாதந்தோறும் மத்திய அரசுக்கு அறிக்கை தயாரித்து அனுப்பும் பொறுப்பு கவர்னரின் முதன்மை செயலாளருக்கே உள்ளது. தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில் ஆர்.ராஜகோபால் அந்த இடத்துக்கு வருவது தமிழக அரசியல்வாதிகள், அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.