கூடலூர் பகுதியில் தொடர் மழை: சாலைகளில் மரம், பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கூடலூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பல இடங்களில் மரம், பாறைகள் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர் பகுதியில் தொடர் மழை: சாலைகளில் மரம், பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
Published on

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதேபோல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் அப்பர் பவானியில் அதிகபட்சமாக 144 மி.மீட்டரும், தேவாலாவில் 107 மி.மீட்டரும், அவலாஞ்சியில் 100 மி.மீட்டரும் மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு நாளில் சராசரியாக 39.37 மி.மீ. மழை பெய்தது.

மழையுடன் கடுங்குளிர் நிலவுவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதேபோல் பச்சை தேயிலை பறிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரப்பாலம் என்ற இடத்தில் நேற்று காலை 7 மணிக்கு ராட்சத மரம் ஒன்று சரிந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் தீயணைப்பு துறையை சேர்ந்த அனில்குமார், ரமேஷ் உள்ளிட்ட வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மழையை பொருட்படுத்தாமல் ராட்சத மரத்தை மின்வாள்கள் கொண்டு வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். காலை 8.30 மணிக்கு மரம் அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு கூடலூர்- மைசூரு இடையே போக்குவரத்து சீரானது.

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பார்வுட் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால் கூடலூரில் இருந்து பார்வுட் வழியாக கிளன்வன்ஸ், எல்லமலை, பெரியசோலைக்கு அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் பாதுகாப்பு கருதி ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் ஆர்.டி.ஓ. முருகையன், தாசில்தார் ரவி, நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் அனிபா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், ஊழியர்கள், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சாலையில் கிடந்த பாறைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டது. பின்னர் பல கட்டங்களாக போராடி பாறைகள் அகற்றப்பட்டது.

இதனால் காலை 11 மணிக்கு கூடலூர்- பெரியசோலை இடையே போக்குவரத்து தொட ங்கியது. இருப்பினும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் எல்லமலை, சூண்டி உள்பட பல இடங்களில் மண் சரிவு அபாயம் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதேபோல் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஓவேலி பேரூராட்சி பகுதியில் செல்போன் அலைவரிசை சேவை முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் தகவல்களை பரிமாற முடியாமல் சிரமம் அடைந்து உள்ளனர். பந்தலூர் தாலுகா பகுதியிலும் பலத்த மழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன. இதனால் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.அம்பலமூலா பகுதியில் சிவஞானம் என்பவரது வீட்டின் மீது மரம் ஒன்று சரிந்து விழுந்தது. இதில் வீட்டின் மேற்கூரை மற்றும் சமையல் அறை சேதம் அடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் கர்ணன், உதவியாளர் பிரேம் குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றினர். இதேபோல் அய்யங்கொல்லி, கோழிச்சால் உள்பட பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தன. இதனால் விடிய விடிய மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கொட்டும் மழை யில் மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com