

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நேற்றிரவும் பரவலாக மழை பெய்தது. புத்தன் அணையில் அதிகபட்சமாக 13 மி.மீ. மழை பதிவானது. மழையின் காரணமாக பாசன குளங்களின் நீர்மட்டமும், அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.
நாகர்கோவில் நகருக்கு முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த அணை 2015-ம் ஆண்டு இறுதியில் நிரம்பி வழிந்தது. அதன் பிறகு பருவமழை பொய்த்து போய் விட்டதால் அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியது. 2016-ம் ஆண்டு இறுதியில் தண்ணீரின்றி வறண்டது. அதன் பிறகு பேச்சிப்பாறை அணை தண்ணீர், ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
தற்போது கடந்த 2 மாதங்களாக பெய்து வரும் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. 25 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் இன்று காலை 23 அடியை எட்டியது. இன்னும் ஓரிரு நாட்களில் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 ஆண்டுகளுக்கு பிறகு முக்கடல் அணை நிரம்புகிறது. இதையடுத்து பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 29.60 அடியாக இருந்தது. அணைக்கு 421 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 156 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 60.75 அடியை எட்டியது. அணைக்கு 453 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 257 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
திருவட்டார் பஸ் நிலையம் பகுதியில் வசித்து வருபவர் துரைசாமி, (வயது 54). இவர், மனைவி, குழந்தைகளுடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் சுவர் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக துரைசாமி உள்பட அனைவரும் காயமின்றி தப்பினர்.