

நெல்லை:
ஒக்கி புயல் காரணமாக நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த மாதம் கன மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் பெய்த மழையினால் அணைகள், குளங்கள் நிரம்பின. அதன்பிறகு மழை குறைந்தது. இந்த நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இரவிலும் மழை நீடித்தது. இன்று காலையில் மாவட்டத்தில் பல இடங்களில் மிதமான மழை பெய்தது.
மலைப்பகுதிகளில் பெய்த மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 134.25 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1642 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 20 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. கீழணையில் இருந்து 1054.75 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதேபோல சேர்வலாறு அணை நீர்மட்டம் 138.84 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 113.70 அடியாகவும் உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 618 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்காக 490 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 82 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 98 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 60 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 80.50 அடியாக உள்ளது.
இதே போல கருப்பாநதி அணை நீர்மட்டம் 51.88 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 26 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 130 அடியாகவும் உள்ளன. மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசம் அணையில் 25 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:
சேர்வலாறு-5, மணிமுத்தாறு-4, கருப்பா நதி-2, ராம நதி-2, அம்பை-2, சேரன்மகாதேவி-2, ஆய்க்குடி- 1.60, பாளை-1.