

வங்க கடலில் ஏற்பட்ட ஒக்கி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் வரலாறு காணாத மழை பெய்தது. நீர்பிடிப்பு பகுதிகளில் இடைவிடாது மழை கொட்டியது.
பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணை பகுதிகளில் 25 ஆண்டுக்கு பின் அதிகமான மழை பெய்தது. இதனால் பாபநாசம், மணி முத்தாறு அணைகளின் நீர்மட்டம் ஒரே நாளில் 20 அடியை தாண்டி உயர்ந்தன. மழை காரணமாக மலை பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் கால்வாய்களில் வெள்ளமாக வந்தது. பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி மற்றும் குற்றாலம் அருவி பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில் நேற்று பிற்பகலில் இருந்து மழை குறையத் தொடங்கியது. மாலையில் மழை நின்றது. எனினும் குற்றாலம் அருவிகளிலும், அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளிலும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு உள்ளது. குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாபநாசம், மணிமுத்தாறு வனப்பகுதிக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. வனத்துறை சோதனைச்சாவடியும் மூடப்பட்டது. இன்றும் அருவிகளில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பிரதான பாசன அணையான பாபநாசம் அணை வேகமாக நிரம்பி வருகிறது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட இந்த அணை நீர்மட்டம் நேற்று 129 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் மேலும் 5 அடி உயர்ந்து 134.45 அடியாக அதிகரித்துள்ளது.
இந்த அணை முழு கொள்ளளவை எட்ட இன்னும் 8.55 அடி தண்ணீரே தேவை. எனவே இன்று அல்லது நாளை இந்த அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 979 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. அணை நீர்மட்டம் 142 அடி வந்தாலே அணையில் தண்ணீரை தேக்காமல் திறந்து விடப்படும். எனவே தாமிரபரணியில் மீண்டும் வெள்ளம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து 147.57 அடியாக உள்ளது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 104.24 அடியாக இருந்தது. தொடர்ந்து பெய்த மழையினால் இந்த அணையின் நீர்மட்டம் இன்று மேலும் 3 அடி உயர்ந்து 107.32 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 330 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.
இந்த அணை நிரம்ப இன்னும் 10 அடி தண்ணீரே தேவை. மற்ற அணைகளில் 85 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கடனா அணை, 84 அடி உச்சநீர்மட்டம் கொண்ட ராமநதி அணை, 72 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கருப்பாநதி அணை, 36.10 அடி உச்சநீர்மட்டம் கொண்ட குண்டாறு அணை, 23.60 அடி உச்சநீர்மட்டம் கொண்ட நம்பியாறு அணை, 52.50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணை ஆகிய 6 அணைகள் நிரம்பி வழிகின்றன. இந்த அணைகளில் இருந்து உபரியாக வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள மற்றொரு அணையான வடக்கு பச்சையாறு அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. இதன் உச்ச நீர்மட்டம் 49.20 அடி. நேற்று இதன் நீர்மட்டம் 38 அடியாக இருந்தது. இன்று இது 41.71 அடியாக உள்ளது. இந்த அணை நிரம்ப இன்னும் 7 அடி தண்ணீரே தேவை. 132.22 அடி உச்சநீர்மட்டம் கொண்ட அடவி நயினார் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று இதன் நீர்மட்டம் 105 அடியாக இருந்தது. இன்று மேலும் 6 அடி உயர்ந்து 111 அடியாக அதிகரித்துள்ளது. இந்த அணை இன்னும் ஓரிரு நாளில் நிரம்ப வாய்ப்புள்ளது.
அணைப்பகுதிகளில் நேற்று மழை குறைந்தது. அதிகபட்சமாக மணிமுத்தாறு அணைபகுதியில் 61 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதே போல மாவட்டத்தில் தாலுகா பகுதிகளில் நேற்று குறைவான மழையே பெய்துள்ளது.
அணைப்பகுதி மற்றும் தாலுகா பகுதிகளில் இன்று காலை வரை பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
மணிமுத்தாறு-61, குண்டாறு-45, சேர் வலாறு-41, பாபநாசம்-37, கொடுமுடியாறு-32, செங் கோட்டை-31, பாளை-25, ராதாபுரம்-22, கடனா அணை-18, நெல்லை-15, அடவிநயினார் அணை-14, சேரன்மகாதேவி-13.20, சங்கரன்கோவில்-12, நாங்குநேரி-11, அம்பை-9.20, ஆய்க்குடி-8.60, தென்காசி-8.20, ராமநதி-8, கருப்பாநதி-8, சிவகிரி-5.