குமரியில் மழை நீடிப்பு - 2500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது

குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் கும்பப்பூ நாற்று நடவு செய்யப்பட்டிருந்த 1500 ஏக்கர் நாற்றும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்த நிலையில் கன்னியாகுமரி கடலில் உருவான மகா புயல் காரணமாக இந்த மழை கனமழையாக மாறியது.

மகா புயல் தீவிர புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. இதனால் இந்த புயல் மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலைகொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் வரை கொட்டித்தீர்த்த இந்த மழை நேற்று சற்று குறைந்தது. ஆனாலும் மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிக அளவு மழை பெய்துள்ளது.

முள்ளங்கினாவிளையில் அதிகபட்சமாக 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

குழித்துறை ஆறு, பழையாறு ஆகியவற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.

கிள்ளியூர் தாலுகாவில் மங்காடு, முன்சிறை, விரிவிளை, பள்ளிக்கல் போன்ற இடங்களில் தற்போது வெள்ளம் வடிய தொடங்கியது.

அதே போல சுசீந்திரம் நங்கை நகர், குத்துக்கல், ஆஷாத் நகர் மற்றும் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்திருந்தது. தற்போது அந்த பகுதிகளில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் வடியத் தொடங்கி உள்ளது. ஆனாலும் தாழ்வான பகுதிகளில் இன்னும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

அருமநல்லூர்- தெரிசனங்கோப்பு சாலையில் மழை நீர் வெள்ளம் போல ஓடியதால் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தற்போது வெள்ளம் வடிந்துள்ளதால் அந்த வழியாக மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

தெரிசனங்கோப்பு, ஈசாந்தி மங்கலம் போன்ற பகுதிகளில் சில இடங்களில் இன்னும் வெள்ளம் வடியாத நிலையே உள்ளது.

வடக்கு தாமரைகுளம், சுசீந்திரம், கற்காடு, தெரிசனங்கோப்பு, தக்கலை போன்ற இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 1000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது.

அதே போல கும்பப்பூ நாற்று நடவு செய்யப்பட்டிருந்த 1500 ஏக்கர் நாற்றும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. தற்போது சில இடங்களில் வெள்ளம் வடியத் தொடங்கி உள்ளது. ஆனாலும் பெரும்பாலான இடங்களில் வயல்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

பூதப்பாண்டியை அடுத்த நாவல்காடு அருகே உள்ள நாடான் குளத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குளத்து தண்ணீர் வயல்களுக்குள் புகுந்தது. குளத்தில் ஏற்பட்ட உடைப்பை அடைக்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் இன்னும் குளத்தில் ஏற்பட்ட உடைப்பை சீர் செய்ய முடியாத நிலையே உள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி விட்டது. 50-க்கும் மேற்பட்ட குளங்கள் உடையும் நிலையில் உள்ளது. கடந்த 2 நாட்களில் மாவட்டம் முழுவதும் பெய்த மழை காரணமாக 75 வீடுகள் இடிந்து விட்டது. இந்த சேதங்களை வருவாய் துறையினரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கணக்கெடுத்து வருகிறார்கள்.

மலையோர பகுதி மற்றும் அணை பகுதிகளில் மழை சற்று குறைந்துள்ளது. இதனால் அணைகளுக்கு வரும் நீர் வரத்தும் குறையத் தொடங்கி உள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டுள்ளன.

இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையில் 38.65 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 2 ஆயிரத்து 167 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணையில் 72.10 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 1401 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து இன்று காலை 1350 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

திற்பரப்பு அருவியில் இன்றும் அதிக அளவு தண்ணீர் கொட்டுகிறது. அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக வடகிழக்கு பருவமழையின் போது குமரி மாவட்டத்தில் 520 மில்லி மீட்டர் மழை பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு 15 நாட்களிலேயே 400 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

மழை காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com