

ரெயில் பயணத்திற்கான முன்பதிவு, ரத்துசெய்வது, தட்கல் முன்பதிவு, ரயில்கள் புறப்படும் நேரம், ரயில்கள் வந்து சேரும் நேரம் உள்ளிட்டவற்றில், பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இந்தியன் ரெயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.
இதற்கிடையே, ரயில்களில் தட்கல் முன்பதிவு மற்றும் ரத்து செய்வது, தட்கல் முன்பதிவு நேரம் ஆகியவை கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளது என வாட்ஸ் அப் மற்றும் சில இணையத்தளங்களில் தகவல் பரவியது. இதனால் ரயில் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களை ரெயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது.
இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ’தட்கல் முன்பதிவு மற்றும் ரத்து செய்வது, தட்கல் முன்பதிவு நேரம் ஆகியவை கடந்த ஒன்றாம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளது என வாட்ஸ் அப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களில் செய்தி பரவுவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த செய்திகள் அனைத்தும் தவறானவை, அடிப்படை ஆதாரமற்றவை. இதுபோன்று தவறான தகவல்களால் ரெயில் பயணிகள் குழப்பம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால், தட்கல் முன்பதிவு மற்றும் ரத்து, முன்பதிவு செய்யும் நேரம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தட்கல் முன்பதிவு நேரம் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஏசி வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத பிற வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கு தட்கல் முன்பதிவு தொடங்கும் என்பதே தற்போது நடைமுறையில் இருந்துவருகிறது.