பாட்னா:
பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் ரெயில்வேக்கு சொந்தமான 2 ஓட்டல்களின் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுத்ததில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் நிதி மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் லாலு குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு லாலு பிரசாத்தின் மனைவியும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான ரப்ரி தேவிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி நேற்று பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் அவர் ஆஜரானார்.
டெல்லியில் இருந்து வந்துள்ள சிறப்பு அதிகாரிகள் குழுவினர், அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு 6 முறைக்கு மேல் ரப்ரிக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகமல் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.