

புதுடெல்லி:
பீகார் முன்னாள் முதல்- மந்திரி லல்லு பிரசாத் யாதவ். ராஷ்டீரிய ஜனதா தளதலைவரான இவர் 2004 முதல் 2009 வரை மத்திய ரெயில்வே துறை மந்திரியாக இருந்தார்.
2006-ம் ஆண்டில் அவரது பதவிக் காலத்தில் ரெயில்வேக்கு சொந்தமாக பூரி மற்றும் ராஞ்சியில் இருந்த 2 ஓட்டல்கள் தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்திய ரெயில்வே மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.) கட்டுப்பாட்டில் இருந்த இந்த இரண்டு ஓட்டல்களின் நிர்வாக உரிமை சுஜாதா ஓட்டல் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கு லஞ்சமாக பீகாரில் 3 ஏக்கர் நிலத்தை பினாமி கம்பெனியில் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக லல்லுபிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி உள்பட 6 பேர் மீது சி.பி.ஐ. கடந்த ஜூலை 7-ந்தேதி வழக்கு பதிவு செய்து இருந்தது.
இந்த வழக்கில் லல்லு பிரசாத் யாதவ், தேஜஸ்வி ஆகியோர் ஆஜராக சி.பி.ஐ. ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் இருவரும் ஆஜராகாமல் அவகாசம் கேட்டு இருந்தனர். லல்லு பிரசாத் நாளையும், தேஜஸ்வி 5-ந்தேதியும் சி.பி.ஐ. முன்பு ஆஜராக வேண்டும்.
ஆனால் இருவரும் இன்று மேலும் அவகாசம் கேட்டனர். இதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வருகிற 5-ந்தேதி லல்லு பிரசாத் யாதவும், 6-ந்தேதி தேஜஸ்வியும் ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. புதிய தேதியை அறிவித்து உத்தரவிட்டது.