

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொது போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டன. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களின் டிக்கெட்டுகள் ரத்து செய்து கட்டணத் தொகை திருப்பி வழங்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் தூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் நேற்று சிறப்பு கவுன்ட்டர் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காலை முதல் ஏராளமான பயணிகள் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்காக காத்து இருந்தனர்.
அப்போது ரெயில்வே பாதுகாப்பு படையினர் பயணிகளை சமூக இடைவெளி விட்டு நிற்க வைத்தனர். அனைவரும் முககவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி பொதுமக்கள் இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை பெற்று சென்றனர். இந்த கவுன்ட்டர்கள் தொடர்ந்து செயல்படும் என்று கூறப்படுகிறது.