

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நேற்று இரவு நடத்திய என்கவுண்டரில் ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சண்டையில் இரண்டு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. பிரிவினைவாத அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து காவல்துறை அறிவுறுத்தலின்படி தெற்கு காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று ரெயில் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. ஸ்ரீநகர், அனந்த்நாக், காசிகந்தில் இருந்து பனிஹல் செல்லும் அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய காஷ்மீரின் ஸ்ரீநகர்- பத்காமில் இருந்து வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா வரையிலான ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.
ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதை அறியாமல் இன்று காலையில் ரெயில் நிலையங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதேபோல் கடந்த மாதமும் பாதுகாப்பு காரணங்களுக்காக பல நாட்கள் ரெயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.