பினாமி பெயரில் ரூ.1000 கோடி சொத்து: லல்லு மகன்கள் வீட்டில் வருமானவரி சோதனை

லல்லு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.1000 கோடி பினாமி சொத்து விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
பினாமி பெயரில் ரூ.1000 கோடி சொத்து: லல்லு மகன்கள் வீட்டில் வருமானவரி சோதனை
Published on

புதுடெல்லி:

பீகார் முன்னாள் முதல்- மந்திரியும், ராஷ்டீரிய ஜனதா தள தலைவருமான லல்லு பிரசாத் யாதவின் குடும்பத்தினர் டெல்லியில் பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக சுசில்குமார் மோடி சமீபத்தில் குற்றம் சாட்டி இருந்தார்.

ஏ.பி.நிறுவனத்தை லல்லுவின் உறவினர்கள் நடத்தி வருவதாக அவர் புகார் கூறி அதற்கான ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் லல்லு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.1000 கோடி பினாமி சொத்து விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

ரூ.1000 கோடி பினாமி சொத்து தொடர்பாக லல்லுவின் மகன்கள், உறவினர்கள் மற்றும் அவர்களது நெருக்கமானவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

டெல்லி மற்றும் குரேசாஸில் 22 இடங்களில் லல்லுவின் பினாமி சொத்துக்கள் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது. இதே போல ராஷ்டீரிய ஜனதா தள எம்.பி.யான பி.சி.குப்தா மகன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில் 100-க்கும் மேற்பட்ட வருமானவரி அதிகாரிகள் ஈடுபட்டனர். பினாமி சொத்து மூலம் வரி ஏய்பு நடந்து இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து வருமானவரி அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வருமானவரி அதிகாரிகளின் இந்த அதிரடி சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. இன்று அதிரடி சோதனை நடத்தியது. லல்லுவின் உறவினர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்று இருக்கிறது.

இதன் மூலம் எதிர்கட்சிகளை அச்சுறுத்தும் செயல்களில் மத்திய பா.ஜனதா அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com