

வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் 1-ம் தேதி முதல் போராடி வருகின்றனர்.
போராட்டத்தின்போது சாலைகளில் காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் வன்முறையும் நடைபெறுகிறது. பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுகின்றன.
இரு தினங்களுக்கு முன் மந்த்சார் மாவட்டம் பிபாலியமண்டியில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் உருவானது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மந்த்சார் பகுதியில் பதட்டம் நீடிக்கிறது. ஏராளமான போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மந்த்சார் மாவட்டத்திற்கு சென்று உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்தார். அதன்படி, இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டார். ராஜஸ்தான் சென்று அங்கிருந்து மத்திய பிரதேசம் செல்ல திட்டமிட்டுள்ளார் அவர்.
ஆனால், தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை உள்ளதால், ராகுல் காந்தியை மந்த்சார் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு திட்டவட்டமாக கூறியுள்ளார். மாவட்டத்திற்குள் நுழைய அவர் முயற்சி செய்தால், அவர் தடுத்து வைக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.