

பெங்களூர்:
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12-ந்தேதி பொதுதேர்தல் நடக்கிறது. இதையொட்டி பா.ஜனதா தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் ரத்து, ஏழை பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன், கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, ரூ.1.5 லட்சம் கோடியில் பாசனத் திட்டங்கள், பசு பாதுகாப்பு திட்டம், மலிவு விலையில் அன்னபூர்ணா உணவகங்கள், ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம், ரூ.25 ஆயிரம் திருமண நிதியுதவி உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை பலவீனமானது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் பா.ஜனதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பலவீனமான ஒன்று. பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்க வேண்டும் என்றால் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் உருவாகியிருக்கும் அது வலுவிழுந்த மனையில் வடிவமைக்கப்பட்ட கற்பனை கட்டிடமாக உள்ளது. அதில் வாக்காளர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை.
காங்கிரசின் தேர்தல் அறிக்கையை படித்தவர்கள் யாரும் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை படித்து நேரத்தை விரயமாக்க வேண்டாம். மொத்தத்தில் அதற்கு 5-க்கு 1 மதிப்பெண் மட்டுமே வழங்க முடியும். பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை மக்கள் புறக்கணிப்பதே சிறந்தது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Karnatakaassemblyelection #RahulGandhi #BJP