நாசிக்: குப்பையில் கண்டெடுத்த நகைகளை போலீசிடம் ஒப்படைத்த தங்க பெண்மணி

நாசிக்: குப்பையில் கண்டெடுத்த நகைகளை போலீசிடம் ஒப்படைத்த தங்க பெண்மணி

மராட்டிய மாநிலம் நாசிக்கில் குப்பையில் கிடந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை போலீசிடம் ஒப்படைத்த பெண்மணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Published on

மும்பை:

மராட்டிய மாநிலம் நாசிக்கில் குப்பையில் கிடந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை போலீசிடம் ஒப்படைத்த பெண்மணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மராட்டிய மாநிலம் நாசிக் நகரை சேர்ந்தவர் சரிதா தால்வி. இவர் கடந்த மாதம் தன்னிடம் இருந்த நகைகளை வங்கி லாக்கரில் வைக்க ஒரு பெட்டியில் வைத்து எடுத்துச் சென்றார். வாசலுக்கு சென்ற அவரை கணவர் அழைத்தால்  நகைகள் அடங்கிய பெட்டியை ஒரு பையில் போட்டு வீட்டில் வைத்தார்.

சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த தால்வி, தான் வைத்த இடத்தில் நகைகள் பையை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தால்வி தனது கணவரிடம் கேட்டார்.

அங்கு வைக்கப்பட்டிருந்த குப்பையை எடுத்து தொட்டியில் போட்டதாக கூறினார். அப்போது தான் தால்விக்கு தனது நகைப்பையை குப்பை அருகில் வைத்தது ஞாபகத்துக்கு வந்தது.

உடனடியாக இருவரும் அந்த பகுதியில் இருந்த குப்பை தொட்டிக்கு விரைந்து சென்று தேடிப்பார்த்தனர். ஆனால் அந்த பையை காணவில்லை. இதுதொடர்பாக அவர்கள் அம்பாட் பகுதியில் உள்ள போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, குப்பை தொட்டிகளில் குப்பைகளை சேகரித்து வரும் கங்குபாய் கோடே (55) என்ற பெண், மும்பை - ஆக்ரா நெடுஞ்சாலையில் உள்ள வில்ஹோலி பகுதியில் கிடந்த ஒரு பையை கண்டெடுத்தார். அந்த பையை பிரித்து பார்த்தவர் அதிர்ச்சி அடைந்தார். அதில் ஏராளமான நகைகள் இருப்பதை கண்ட அவர், அருகிலுள்ள் காவல் நிலையம் சென்று அதை ஒப்படைத்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நகைகள் சரிதா தால்விக்கு சொந்தமானது என தெரிந்தது. அவரை அழைத்து தகவல் கூறி அவரிடம் நகைப்பையை ஒப்படைத்தனர்.

குப்பையில் கிடந்த நகைகளுக்கு ஆசைப்படாமல், அந்தப் பையை நாணயத்துடன் கொண்டு வந்து போலீசில் ஒப்படைத்த கங்குபாய்க்கு சரிதா தால்வி பாராட்டு தெரிவித்தார். அத்துடன், அவரது நாணயத்தை கவுரவிக்கும் வகையில் 10,000 ரூபாய் வழங்கி உற்சாகப்படுத்தினார்.    

குப்பை தொட்டியில் குப்பைகளுக்கு இடையே கிடந்த நகைகளை மீட்டு போலீசிடம் ஒப்படைத்த தங்க பெண்மணி   கங்குபாய்க்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com