

பாலாசோர்:
25 முதல் 30 கி.மீ. வரை சென்று தாக்கும் திறன் வாய்ந்த அதிநவீன ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) தயாரித்து வருகிறது. விரைவான எதிர்வினை ஆற்றும் இந்த ஏவுகணை கடந்த மாதம் 4 ந்தேதி ஏற்கனவே வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
தரையில் இருந்து வானத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை சோதனை இன்று மீண்டும் நடந்தது. ஒடிசாவின் பாலாசோர் அருகே சந்திப்பூரில் அமைக்கப்பட்டு உள்ள ஒருங்கிணைந்த ஏவுதளத்தின் நடமாடும் செலுத்து வாகனத்தில் இருந்து இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த ஏவுகணை வெற்றிகரமாக தாக்கியது.
அனைத்து காலநிலையிலும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த ஏவுகணை தனது இலக்கை தேடி கண்டுபிடித்து அழிக்கும் திறன் பெற்றிருப்பதுடன், ஒன்றுக்கு மேற்பட்ட இலக்குகளையும் தாக்கும் திறனும் உடையதாகும்
இந்த குறுகியதூர அதிவேக ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி அருண் ஜெட்லி பாராட்டு தெரிவித்துள்ளார். இது உள்நாட்டு தயாரிப்பு ஏவுகணை சோதனையில் முக்கியமான மைல்கல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.