அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை 3 எஃப்.ஐ.ஆர் பதிவு
புதுடெல்லி:
டெல்லி மாநில பொதுப்பணித் துறையில் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கிய ஒப்பந்தங்களில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் 3 எப்ஐஆர்கள் பதிவு செய்து இருந்தனர்.
அதில் ஒரு எப்ஐஆரில் சமீபத்தில் மரணமடைந்த கெஜ்ரிவாலின் மைத்துனர் சுரேந்தர் பன்சாலுக்கு சொந்தமான நிறுவனம் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. திட்டங்களை நிறைவேற்றாமலே முடித்துள்ளதாகவும், பொருட்களை வாங்காமலே, போலி ரசீதுகள் தயாரித்து பல கோடி ரூபாய் பெற்றுள்ளதாகவும் பன்சால் மீது குற்றச்சாட்டு நிலவுகிறது.
இந்நிலையில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக மே 8-ம் தேதி 3 எஃப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்துள்ளதாக அம்மாநில லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.
தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த ராகுல் சர்மா என்பவர் பொதுப்பணித் துறை வழக்கில் கெஜ்ரிவால் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டுமென கோரி தொடர்ந்த வழக்கில் டெல்லி லஞ்ச ஒழிப்பு துறை இந்த தகவலை தெரிவித்தது.
இதனிடையே புகார் அளித்த சர்மாவின் வாகனம் மீதும் சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்தும் வழக்கு பதிவு செய்து ஜூன் 8-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக அவரது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வே குற்றம்சாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

