ஒட்டன்சத்திரம் அருகே சொந்த செலவில் தடுப்பணை கட்ட விவசாயிக்கு கடிதம் அனுப்பிய அதிகாரி

ஒட்டன்சத்திரம் அருகே தடுப்பணை கட்ட கோரிக்கை விடுத்த விவசாயிக்கு சொந்த செலவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும்படி பதில் அளித்த பொதுப்பணித்துறை அதிகாரிக்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பெரியப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மதன் குருசாமி. இவர் விவசாயிகள் குறை தீர்க்கும் குழு உறுப்பினராகவும் உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

அதில் நங்காஞ்சியாறு வடிநிலக்கோட்டம் பெரியப்பூர் கிராம பகுதியில் ஜவ்வாது பட்டி, பெருங்குளம் கண்மாய்க்கு செல்லும் நீர் வழிப்பாதையின் குறுக்கே 2 இடங்களில் நடைபாதை பாலம் மற்றும் தடுப்பணைக்ள அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் அளித்த நங்காஞ்சியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தன் அனுப்பியுள்ள கடிதத்தில், தாங்கள் குறிப்பிட்டுள்ள பகுதியில் நடைபாலம் மற்றும் தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறவில்லை. எனவே தாங்கள் சொந்த செலவில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள சம்மதம் தெரிவித்து இந்த அலுவலகத்துக்கு விண்ணப்பம் அளித்தால் துறை ரீதியான அனுமதி வழங்க பரிசீலிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இது குறித்து விவசாயி மதன்குருசாமி தெரிவிக்கையில், அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய வரவே இல்லை. அலுவலகத்திலேயே உட்கார்ந்து கொண்டு நீங்கள் வேண்டுமானால் சொந்த செலவில் கட்டுங்கள் என கிண்டலாக பதில் அனுப்பியுள்ளார். இது என்னைப் போன்ற விவசாயிகளை மிகவும் வேதனையடைய வைத்துள்ளது.

இதன் மூலம் பொதுப்பணித்துறையினர் விவசாயிகளின் கருத்துக்களை எந்த அளவுக்கு மதிக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளலாம். எனவே இது போன்ற அலட்சியப் போக்கை அதிகாரிகள் இனி வரும் காலங்களிலாவது கைவிட வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com