

புதுச்சேரி:
புதுவை பூமியான்பேட்டை ராகவேந்திரா நகர் 2-வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகசாமி. இவர் பொதுப்பணித்துறையில் மஸ்தூர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி (வயது 47). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் கொச்சியில் கப்பல் கேப்டனாக வேலை செய்து வருகிறார். இதற்கிடையே கடந்த ஒரு வருடமாக லட்சுமி கழுத்து வலி மற்றும் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தார். டாக்டர்களிடம் காண்பித்தும் நோய் முற்றிலுமாக குணமாகவில்லை.
இதனால் லட்சுமி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவ்வப்போது கணவரிடம் கூறி வந்தார். அப்போதெல்லாம் முருகசாமி மனைவிக்கு ஆறுதல் கூறி சமாதானம் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை லட்சுமிக்கு இடுப்பு வலி அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் மின் விசிறியின் கொக்கியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.