

மாஸ்கோ:
ரஷிய அதிபர் தேர்தலில் 76 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகளைப் பெற்று, அதிபர் விளாடிமிர் புதின் அமோக வெற்றி பெற்று உள்ள நிலையில், 2018, 2019 ஆண்டுகளில் ராணுவ செலவினங்களை குறைப்பதற்கு உறுதி எடுத்து உள்ளார்.
அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை கிரெம்ளின் மாளிகையில், நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர்களிடம் புதின், “ராணுவ செலவினங்களை 2018, 2019 ஆண்டுகளில் குறைப்போம். அதே நேரத்தில் இது நாட்டின் தற்காப்பு தகுதி திறனை குறைத்துவிடாது. ஏனென்றால் கடந்த ஆண்டுகளில் புதிய ஆயுதங்கள் வாங்குவதற்கு பெருந்தொகை முதலீடு செய்யப்பட்டு உள்ளது. நமது கூட்டாளிகளுடனான எல்லாப் பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளப்படும். ஆயுதப்போட்டியில் நாம் ஈடுபட மாட்டோம்” என கூறினார்.
மேலும், “அரசாங்கமானது, உள்நாட்டு விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்தும். குறிப்பாக பொருளாதார வளர்ச்சி, புதுமை, ஆரோக்கியம், கல்வி, அறிவியல், உள்கட்டமைப்பு, மக்களின் நலன் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும்” எனவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் ராணுவ பட்ஜெட்டுகளை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிற வேளையில், ராணுவ செலவினங்களை குறைத்துக்கொள்ளப்போவதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்து இருப்பது உலக அரங்கை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.