

புதுடெல்லி:
தூய்மை மற்றும் சுகாதாரத்தை பேணும் வகையில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் ஏழைகளுக்கு கழிப்பிட வசதிகளை மேம்படுத்தி சுகாதாரத்தை பேணுவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கு உலக வங்கி உதவி செய்ய முன்வந்துள்ளது. அதன்படி இந்த திட்டப்பணிகளுக்காக 1.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.10 ஆயிரம் கோடி) கடன் வழங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் கையழுத்தானது.
மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான இணை செயலாளர் ராஜ்குமாரும், இந்தியாவுக்கான உலக வங்கியின் தேச இயக்குனர் ஒன்னோ ருல்லும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர்.
உலக வங்கி வழங்கும் இந்த தொகையில் கிராமப்புறங்களில் உள்ள திறந்தவெளி கழிப்பிடங்களுக்கு பதிலாக, கழிப்பிடங்கள் கட்டி கொடுத்து 2019-ம் ஆண்டுக்குள் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும். மேலும் திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும். இந்த திட்டப்பணிகளை மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்கொள்ளும்.