

கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் புகழேந்தி மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அமைச்சர் ஜெயக்குமார் இருக்கிறாரா? இல்லையா? என்பதை முதல்-அமைச்சர் விளக்க வேண்டும்.
சசிகலா மற்றும் தினகரன் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவிப்பது ஏன்?.
அவரிடம் முதல்-அமைச்சர் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அப்படி இல்லாவிட்டால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக அமைச்சர் ஜெயக்குமார் தேசிய கொடியை ஏற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகி விடும். எனவே, அமைச்சர் ஜெயகுமாரிடம் முதல்-அமைச்சர் ஒரு கண் வைக்க வேண்டும்.
சசிகலா, தினகரனை அ.தி.மு.க.வில் இருந்து நீக்க முடியாது. அப்படி நீக்கினால் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது. ஆட்சியும் பறிபோய் விடும்.
ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரில் கிராம மக்களுடைய தண்ணீர் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. அவர் குடிநீர் பிரச்சினைக்காக போராட்டம் நடத்துவேன் என அறிவித்து இருப்பது கேலிக்கூத்தானது.
இவ்வாறு அவர் கூறினார்.