

பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வசியாபுரத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 50). பப்ஸ் வியாபாரி. இவரது மனைவி தாமரைச்செல்வி (47). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
சுதாகர் நேற்று முன்தினம் அருகில் உள்ள சீனிவாசபுரம் என்ற கிராமத்தில் சைக்கிளில் வீடு, வீடாக சென்று பப்ஸ் வியாபாரம் செய்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தம்புராஜ் (23), ஜாகீர் என்ற சதாம் உசேன், (25),தினேஷ்குமார் (23) ஆகிய 3 பேரும் சுதாகரனிடம் பப்ஸ் வாங்கி சாப்பிட்டனர். அப்போது அவர்கள் 3 பேரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.
விற்பனை செய்த பப்சுக்கு சுதாகர் பணம் கேட்டார். ஆனால் அவர்கள் பணம் தரமறுத்தனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் பப்ஸ் வியாபாரி சுதாகரனை தாக்கினர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனையடுத்து வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்ததும் அவரது மனைவி தாமரைச்செல்வி சம்பவ இடத்திற்கு ஓடி வந்தார். பொதுமக்கள் உதவியுடன் கணவரை மீட்டு பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மாலை அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே சுதாகர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி தாமரைச்செல்வி பொள்ளாச்சி மேற்கு போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் தம்புராஜ், ஜாகீர், தினேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.