புதுவை இளம்பெண் ரூ.2½ லட்சத்துக்கு கம்போடியா நாட்டில் விற்பனை- ஒருவர் கைது

வெளிநாட்டு வேலை, கை நிறைய சம்பளம் என கனவுகளோடு கம்போடியா நாட்டுக்கு சென்ற இளம்பெண்ணுக்கு அங்கு சென்றதும் அதிர்ச்சி காத்திருந்தது. தனி அறையில் அடைத்து வைத்தும் கம்போடியா கும்பல் இளம்பெண்ணை சித்ரவதை செய்துள்ளது.
புதுவை இளம்பெண் ரூ.2½ லட்சத்துக்கு கம்போடியா நாட்டில் விற்பனை- ஒருவர் கைது
Published on

புதுச்சேரி:

புதுவையை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் வெளிநாட்டில் உள்ள தொலைக்காட்சி அலுவலகம் ஒன்றில் தொலைபேசி அழைப்பாளர் பணி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டு அவர் பேசினார். அப்போது எதிர்முனையில் புதுவை முதலியார்பேட்டையை சேர்ந்த முருகன் என்ற வாலிபர் பேசினார். அவர் கம்போடியா நாட்டில் வேலை இருப்பதாகவும், அங்கு உங்களை அனுப்பி வைப்பதற்கான ஏஜெண்டுகள் சென்னையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

வேலையில் சேர்த்து விடுவதற்கு புரோக்கர் கமிஷனாக ரூ.4 லட்சம் தர வேண்டும் என்றும், மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் கிடைக்கும் என்றும் முருகன் கூறியுள்ளார். இதற்கு இளம்பெண் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அவரை கம்போடியா நாட்டுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை சென்னை ஏஜெண்டுகள் மேற்கொண்டுள்ளனர். இவர்களில் ராஜ்குமார் என்பவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

புதுச்சேரி இளம்பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக ரூ.4 லட்சம் கேட்ட கும்பல் இறுதியாக ரூ.3¼ லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு அவரை சுற்றுலா விசாவில் கம்போடியா நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வெளிநாட்டு வேலை, கை நிறைய சம்பளம் என கனவுகளோடு கம்போடியா நாட்டுக்கு சென்ற இளம்பெண்ணுக்கு அங்கு சென்றதும் அதிர்ச்சி காத்திருந்தது. தொலைபேசி அழைப்பாளர் வேலையை வழங்காமல் அங்கிருந்தவர்கள் இளம்பெண்ணை எடுபிடி வேலைக்கு பயன்படுத்தி உள்ளனர்.

நாங்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். ரூ.2½ லட்சத்துக்கு உன்னை விலைக்கு வாங்கியுள்ளோம் என்று கம்போடியா கும்பல் கூறியுள்ளது. தாங்கள் சொல்வதை கேட்காவிட்டால் விபசார கும்பலிடம் விற்று விடுவோம். உன்னை அதிக விலைக்கு வாங்குவதற்கு இங்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்றும் கூறி கம்போடியா கும்பல் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதனால் பயந்து போன இளம்பெண் வேறு வழியின்றி அவர்கள் சொல்வதை கேட்டு வேலை செய்து வந்துள்ளார். அப்போது தனி அறையில் அடைத்து வைத்தும் கம்போடியா கும்பல் இளம்பெண்ணை சித்ரவதை செய்துள்ளது. இதனை அங்கு பணிபுரிந்து வந்த இந்தியர் ஒருவர் பார்த்து இளம்பெண் மீது கருணை காட்டியுள்ளார். பின்னர் அவரது உதவியுடன் புதுவை இளம்பெண் பத்திரமாக புதுவைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.

இதன் பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து இளம்பெண் புதுச்சேரி டி.ஜி.பி. மனோஜ் குமார் லாலிடம் புகார் தெரிவித்தார். இதன் பேரில் அங்குள்ள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது புதுச்சேரி இளம்பெண்ணை முதலியார் பேட்டையை சேர்ந்த வாலிபர் முருகன் மற்றும் சென்னை புரோக்கரான வெளிநாட்டு ஏஜெண்டு ராஜ்குமார் ஆகியோர் திட்டம் போட்டு பணத்துக்காக ஏமாற்று வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து புதுவை வாலிபர் முருகனை போலீசார் கைது செய்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஏஜெண்டு ராஜ் குமாரை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மோசடிக்கும்பல் இளம்பெண்ணிடம் ரூ.3¼ லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு ரூ.2½ லட்சத்துக்கு கம்போடியா கும்பலிடம் விற்பனை செய்திருக்கும் திடுக்கிடும் தகவலும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சென்னை ஏஜெண்டை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இளம்பெண்ணை சித்ரவதை செய்த கம்போடியா கும்பல் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுவை இளம்பெண்ணை டாலர் கணக்கில் கம்போடியா கும்பல் விலை பேசி இருப்பதும் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதன்படி 3500 டாலர் கொடுத்து கம்போடியா மோசடி கும்பல் இளம்பெண்ணை வாங்கி இருப்பதும் அம்பலமாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து இதன் பின்னணியில் உள்ள தமிழகம், புதுவை மோசடி கும்பலையும், கம்போடியா நாட்டை சேர்ந்தவர்களையும் பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.

கம்போடியாவில் இளம்பெண்ணை சித்ரவதை செய்தவர்கள் யார்? என்பதும் அடையாளம் தெரியவந்துள்ளது. அங்கு உள்ள ஒரு நிறுவன மேலாளர் அட்டிடோ மற்றும் ஜான் ஆகியோர் தான் தொலைபேசி அழைப்பாளர் பணிக்கு பதிலாக வேறு வேலை கொடுத்து சித்ரவதை செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com