

புதுவை திலகர் நகரை சேர்ந்தவர் ராஜமாதங்கி (வயது25).
இவரின் கணவர் சரவணன், சென்னையில் திருமண போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார். கடந்த 2-ந்தேதி ராஜமாதங்கியை தலையில் காயத்துடன் ஒருவர் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்து வந்தார்.
டாக்டர்கள் விசாரித்தபோது, ராஜமாதங்கி தன்னுடன் வந்தவர் தனது கணவர் சரவணன் என்றும் முருகா தியேட்டர் அருகில் விபத்தில் சிக்கியதால் காயமடைந்ததா கூறியுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், தலையில் காயம் இருப்பதாகவும் 3 மாத கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறும்படி கூறினர். ஆனால் ராஜமாதங்கி தனக்கு உடல்நிலை நன்றாக இருப்பதாக கூறி தலை காயத்துக்கு மட்டும் சிகிச்சை பெற்றுவிட்டு அந்த நபருடன் திலகர் நகரில் உள்ள வீட்டுக்கு சென்றுவிட்டார்.
வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து ராஜமாதங்கியின் தாயார், அருகில் உள்ளவர்கள் அவரை மீண்டும் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு அழைத்து சென்றனர்.
அவரை பரிசோதித்தபோது, உடல் முழுவதும் காயம் இருந்தது. அவரின் தாயாருக்கும் இதுபற்றி தெரியவில்லை. இதனால் கோரிமேடு போக்குவரத்து போலீசுக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ராஜமாதங்கி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை பரிசோதித்த போது முருகா தியேட்டர் அருகே எந்த விபத்தும் நடக்கவில்லை என தெரியவந்தது. இதையடுத்து ராஜமாதாங்கி வந்த வாகன எண், அவரை அழைத்து வந்தவர் யார்? என விசாரித்தனர்.
அப்போது சின்ன கோட்டகுப்பத்தை சேர்ந்த சுரேந்திரன் (29) அவரை அழைத்து வந்தது தெரியவந்தது. போலீசார் அவரைப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
ராஜமாதங்கி திருமணத்துக்கு முன்பு பள்ளி பருவம் முதல் விழுப்புரம் மாவட்டம் சின்ன கோட்டகுப்பத்தை சேர்ந்த சுரேந்திரனை காதலித்து வந்துள்ளார். இதை ஏற்காத ராஜமாதங்கியின் பெற்றோர், சரவணனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
தம்பதிகள் சென்னையில் வசித்து வந்துள்ளனர். சுரேந்திரன் சிங்கப்பூருக்கு வெல்டிங் வேலைக்கு சென்று விட்டார். சில மாதம் முன்பு சின்ன கோட்டகுப்பம் திரும்பிய சுரேந்திரன், மீண்டும் ராஜமாதங்கியை தொடர்பு கொண்டுள்ளார்.
திருமணத்துக்கு பின் மீண்டும் அவர்களிடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. சுரேந்திரன் அடிக்கடி சென்னை சென்று விடுதியில் அறை எடுத்து ராஜமாதங்கியுடன் இருந்து வந்துள்ளார். இதையறிந்த சரவணன், ராஜ மாதங்கியை கண்டித்தார்.
இதனால் சுரேந்திரன், ராஜமாதங்கி இருவரும் சரவணனை சந்தித்து, தங்கள் காதலை தெரிவித்து, விவகாரத்து செய்யும்படி கோரினர். இதனால் மனமுடைந்த சரவணன், தனது மனைவியை திலகர் நகரில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு சென்னை சென்றுவிட்டார்.
இதன்பின் சுரேந்திரன் வீட்டுக்கு அடிக்கடி ராஜமாதங்கி சென்று வந்துள்ளார். ராஜமாதங்கி, போன் செய்தவுடன் சுரேந்திரன் எடுக்காவிட்டால், அவர் வீட்டுக்கு சென்று தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதேபோல கடந்த 2-ந்தேதி போனை சுரேந்திரன் எடுக்காததால் ஆட்டோவில் அவர் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். இதை தட்டிக்கேட்ட சுரேந்திரன் தாயை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேந்திரன், ராஜமாதங்கியை அடித்துள்ளார்.
அவர் வலி தாங்காமல் ஓடும்போது கால்வாயில் விழுந்து தலையில் அடிபட்டுள்ளது. அவரை சுரேந்தின் பைக்கில் அழைத்து வரும்போது, முருகா தியேட்டர் அருகே கீழே விழுந்துவிட்டதாக டாக்டர்களிடம் கூறும்படி தெரிவித்துள்ளார்.
இதனால் சுரேந்திரனை மறைத்து கணவர் சரவணன் எனக்கூறி, கையெழுத்திட வைத்து ராஜமாதங்கி விபத்தில் சிக்கியதாக கூறி சிகிச்சை பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் வழக்கை கோரிமேடு போலீசில் ஒப்படைத்தனர்.
கோரிமேடு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சுரேந்திரனை கைது செய்து, தடயங்களை சேகரித்து வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பின் வழக்கை கோட்டகுப்பம் போலீசில் ஒப்படைக்க கோரிமேடு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.