வெளுத்து வாங்கிய மழை: கடற்கரை சாலையில் தேங்கிய வெள்ளத்தில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

சுமார் 2 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகும் லேசாக தூரல் மழை பெய்து கொண்டே இருந்தது.பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் அப்பகுதிகளில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.
மழைநீரில் ஆனந்தமாக குளித்த காட்சி, பாரதி பூங்கா முன்பு வாகனங்களை மூழ்கடித்த வெள்ளம்.
மழைநீரில் ஆனந்தமாக குளித்த காட்சி, பாரதி பூங்கா முன்பு வாகனங்களை மூழ்கடித்த வெள்ளம்.
Published on

புதுச்சேரி:

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் புதுச்சேரியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை வானில் கரு மேகங்கள் திரண்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தோன்றி குளிர்ந்த காற்று வீசியது.

தொடர்ந்து 6 மணிக்கு மேல் இடி-மின்னலுடன், மழை பெய்யத்தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகும் லேசாக தூரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

கன மழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான இடங்களில் மின்தடை செய்யப்பட்டது. 2 மணி நேரம் பெய்த மழையால் நகரின் பிரதான சாலைகளான புஸ்சி வீதி, காந்தி வீதி, சின்னசுப்புராயப் பிள்ளை வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் வாகனங்கள் மழை நீரில் தத்தளித்தப்படி மெதுவாக ஊர்ந்து சென்றன. கடற்கரை சாலையிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை நீரில் சுற்றுலா பயணிகள் சிலர் ஆனந்த குளியல் போட்டனர்.

நகரின் பல வீதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதால் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மூழ்கின.

அதுபோல் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் அப்பகுதிகளில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. அப்போது மின் நிறுத்தம் செய்யப்பட்டதால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை. உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மரக்கிளைகளை அகற்றினர்.

அதுபோல் மின்துறை ஊழியர்களும் அறுந்து விழுந்த மின் கம்பிகளை சீரமைத்தனர். மழை நின்ற பிறகு மின் விநியோகம் செய்யப்பட்டது.

இன்று காலையிலும் லேசாக தூரல் மழை பெய்தது. வானம் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com