கூடுதல் சாம்பார் கேட்ட தகராறில் வாலிபருக்கு வெட்டு-ஓட்டல் சூறை

ஓட்டலில் இருந்த ஆறுமுகத்தின் மகன் லோகேஸ்வரனுக்கும், அஜித்குமாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. தகவல் அறிந்த அஜித்குமாரின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஓட்டலுக்கு திரண்டு வந்தனர்.
கூடுதல் சாம்பார் கேட்ட தகராறில் வாலிபருக்கு வெட்டு-ஓட்டல் சூறை
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி அருகே வில்லியனூர் தட்டாஞ் சாவடிபகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் வில்லியனூர் அருகே உள்ள பத்துக்கண்ணு பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (வயது 24) என்பவர் ஓட்டலுக்கு பார்சல் சாப்பாடு வாங்க வந்தார். அப்போது அவர் கூடுதலாக ஒரு சாம்பார் பாக்கெட் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஓட்டலில் இருந்த ஆறுமுகத்தின் மகன்லோகேஸ்வரனுக்கும், அஜித்குமாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி மோதலாக மாறியது.

அப்போது ஆத்திரமடைந்த லோகேஸ்வரன் கையில் வைத்திருந்த அரிவாளால் அஜித்குமாரை வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதற்கிடையே தகவல் அறிந்த அஜித்குமாரின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஓட்டலுக்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஓட்டலில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ஓட்டலில் திரண்டு இருந்த அஜித் குமாரின் ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்களை விரட்டி அடித்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. அங்கு மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com