7 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும்-குழியுமாக இருந்த சாலையை சீரமைத்த மாணவன்: பாராட்டு குவிகிறது

தாத்தா போல் பள்ளத்தில் மற்றவர்கள் யாரும் விழுந்து அடிப்படக் கூடாது, ஏதேனும் உயிர் சேதம் ஏற்படக்கூடாது என்று எண்ணி சாலையை சீரமைக்கும் பணியில் மாணவன் ஈடுபட்டான்.மாணவனின் செயலை பார்த்த வாகன ஓட்டிகள் சிறுவனை பாராட்டிவிட்டு சென்றனர்.
சாலையை சீரமைக்கும் சிறுவன்
சாலையை சீரமைக்கும் சிறுவன்
Published on

புதுச்சேரி:

வில்லியனூர் - பத்துக்கண்ணு சாலையில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி, பணிக்கு செல்ல ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது.

கடந்த 7 ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படாததால் ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து குண்டும்-குழியுமாக மாறியுள்ளது. சில இடங்களில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் சாலை பள்ளத்தில் விழுந்து ரத்தக் காயங்களுடன் செல்கின்றனர்.

இந்த நிலையில் சேந்தநத்தம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 60). தனது மோட்டார் சைக்கிளில் இந்த சாலையில் சென்ற போது பள்ளத்தில் விழுந்த போது பிரேக் போட்டுள்ளார்.

அப்போது பின்பக்கம் வந்த மோட்டார் சைக்கிள் மோதி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தற்போது சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சேகரின் பேரன் மாசிலாமணி (13). அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் தனது தாத்தா போல் பள்ளத்தில் மற்றவர்கள் யாரும் விழுந்து அடிப்படக் கூடாது, ஏதேனும் உயிர் சேதம் ஏற்படக்கூடாது என்று எண்ணி இன்று காலை சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டான்.

எத்தனையோ பணக்காரர்கள், அரசியல்வாதிகள் சென்றுவரும் இந்த சாலையில் ஒரு சிறுவன் தனி ஆளாக நின்று ஆங்காங்கே கிடக்கும் சிமெண்ட் கற்கல், சாலையோரம் உள்ள மணல் ஆகியவற்றை போட்டு சுத்தியால் தட்டி தண்ணீர் ஊற்றி மட்டம் செய்து சாலையை சீரமைத்துள்ளார்.

மாணவனின் இச்செயலை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சிறுவனை பாராட்டிவிட்டு சென்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com