புதுச்சேரி சட்டசபையில் 2-ந்தேதி பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர் அறிவிப்பு

வருகிற 31-ந்தேதி காலை 9.30 மணிக்கு புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.அன்றைய தினம் சபையில் கவர்னர் உரையாற்றுகிறார்.
புதுச்சேரி சட்டசபையில் 2-ந்தேதி பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர் அறிவிப்பு
Published on

புதுச்சேரி:

புதுச்சேரியில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

பாராளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அரசின் 5 மாத செலவினத்துக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

தேர்தல் முடிந்தவுடன் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் கடந்த மாதம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் கூடியது. கூட்டத்தில் ரூ.12 ஆயிரத்து 700 கோடிக்கு வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக கோப்பு மத்திய உள்துறை, நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதுச்சேரி அரசின் ரூ.12 ஆயிரத்து 700 கோடி பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை, நிதித்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யும் கோப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். இதன்படி வருகிற 31-ந்தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அன்றைய தினம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறார்.

ஆகஸ்டு 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று தெரிவித்தார்.

15-வது சட்டசபையின் 5-வது கூட்டம் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் சபையில் கவர்னர் உரையாற்றுகிறார். 1-ந் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. மறுநாள் 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பட்ஜெட்கூட்ட தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.

இவ்வாறு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com