

புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ளது.
கடந்த மாதம் 13-ந்தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன், பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம், என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த மல்லாடிகிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
அவர்களுக்கு இன்னும் இலாகா ஒதுக்கவில்லை. புதுவையில் முதல்-அமைச்சருடன் சேர்ந்து 6 அமைச்சர்கள் பதவியேற்கலாம். என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி மீதமுள்ள 3 அமைச்சர் பதவியில் பாஜகவுக்கு1, என்ஆர்.காங்கிரசுக்கு 2 பதவி கிடைக்கும்.
இதில் சமீபத்தில் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்த முதல்-அமைச்சர் ரங்கசாமி, 2 அமைச்சர்கள் பட்டியலை வழங்கினார். பாஜகவை சேர்ந்த ராஜசேகர், என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த ராஜவேலு ஆகியோர் புதிய அமைச்சர்களாக ரங்கசாமி பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையை கவர்னர் கைலாஷ்நாதன் மத்திய உள்துறை அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தார். புதிய அமைச்சர்கள் 7-ந்தேதி பதவியேற்பார்கள் என தகவல்கள் வெளியானது.
யூனியன் பிரதேசமான புதுவைக்கு மத்திய அரசின் அனுமதியுடன்தான் அமைச்சர்கள் பதவியேற்க முடியும். அதன்படி அனுப்பப்பட்ட கோப்புக்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அமைச்சர்கள் பதவியேற்பு தள்ளி போகிறது.
அநேகமாக அடுத்தவாரத்தில் பதவியேற்பு இருக்கலாம் என தெரிகிறது. இதனிடையே மீதமுள்ள ஒரு அமைச்சரை தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் முடிந்தபிறகு நியமிக்க ரங்கசாமி திட்டமிட்டுள்ளார்.
அதேபோல சபாநாயகர் பதவியை பாஜக தொடர்ந்து கேட்டு வருகிறது. பாஜகவில் 4 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் நமச்சிவாயமும், ராஜசேகரும் அமைச்சர்களாகி விட்டால் மீதம் இருப்பது 3வது முறையாக வெற்றி பெற்ற ஜான்குமார், மற்றொருவர் காரைக்கால் நிரவி தொகுதியில் பாஜக சார்பில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மீனாட்சி சுந்தரம்.
இதனால் பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார் அல்லது மீனாட்சி சுந்தரம் இருவரில் ஒருவருக்கு சபாநாயகர் பதவி வழங்க வேண்டும. ஆனால் முதல்-அமைச்சர் ரங்கசாமி பாஜகவுக்கு சபாநாயகர் பதவிக்கு பதிலாக துணை சபாநாயகர் பதவியை தர திட்டமிட்டுள்ளார். இதை பாஜகவினர் ஏற்பார்களா? என கேள்வி எழுந்துள்ளது.
இதனால் தேர்தல் முடிவு வெளியாகி ஒரு மாதமாகியும் புதுவை சட்டசபைக்கு சபாநாயகர் தேர்வு செய்யப்படாமல் உள்ளது.