ஏனாமில் கடைகள் அடைப்பு: 2-வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்

அரசின் கலை விழா 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் நிலையில் பல மாநில கலைஞர்கள் ஏனாமிற்கு வந்துள்ளனர்.கடை அடைப்பு போராட்டம் கலைஞர்களையும், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதித்துள்ளது.
ஏனாமில் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி கிடக்கும் காட்சி.
ஏனாமில் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி கிடக்கும் காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்று பகுதியில் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் தொகுதிகளில் முதல்-அமைச்சர் ரங்கசாமி போட்டியிட்டார்.

ஏனாமில் அவர் தோல்வியுற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கொல்ல பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் வெற்றி பெற்றார். இருப்பினும் அவர் பா.ஜனதா-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் கடந்த மாதம் 7-ந் தேதி சட்டமன்றம் வளாகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தி 15 கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

இந்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையே ஏனாம் எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசியதாக சமூகவலைதளத்தில் பரவியது. இதனால் கொதித்தெழுந்த புதுவை என்.ஆர். காங்கிரசார் ஏனாம் எம்.எல்.ஏ.வை கண்டித்து பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவதூறாக பேசிய ஏனாம் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடமும், போலீஸ் டி.ஜி.பி.யிடமும் மனு அளித்தனர்.

இன்றும் என்.ஆர். காங்கிரசார் ஏனாம் எம்.எல்.ஏ.வை கண்டித்து புதுவையில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே கோரிக்கைகளை வலியுறுத்தியும் முதல்-அமைச்சரை கண்டித்தும் நேற்று ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. மண்டல அதிகாரி அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

மேலும் ஏனாமில் அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்த அரசின் 19-வது ஆண்டு கலை விழாவை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் புறக்கணித்தார்.

இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்தது. இன்று ஏனாமில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார். இதன்படி இன்று ஏனாமில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஏனாமில் காலை முதல் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com