

"மக்களின் முதல்வர்", “எளிமையின் அடையாளம்”, “வரலாற்று நாயகர்" என்ற வாசகங்களுடன் ரங்கசாமி ஆட்சியின் மக்கள் நல திட்டங்களையும் புகழ்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நாளை 77-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகளும், கட்சியினரும், ஆதரவாளரும் பல்வேறு புதுமையான கெட்டப்புகளில் ரங்கசாமிக்கு கட்-அவுட் மற்றும் பேனர்களை வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் முதலமைச்சர் ரங்கசாமி, முருக கடவுளாக தொடங்கி சினிமா நடிகர்களின் கெட்டப்புகளில் இடம் பெற்றுள்ளார். "புஷ்பா 2" திரைப்பட கெட்டப்பிலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் ஸ்டைல்களில் அவரது படங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் தமிழக முதலமைச்சர் விஜய் சட்டசபையில் கைகளால் செய்த செய்கை போல முதல்- அமைச்சர் ரங்கசாமி இடம் பெற்றுள்ள பேனர் பல பகுதிகளில் உள்ளது. உலக கோப்பை கால்பந்து போட்டியில் இடம்பெற்ற நட்சத்திர விளையாட்டு வீரர்கள் தோற்றத்திலும் ரங்கசாமி கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. இது இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பெரும்பாலான பேனர்களில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் ஆன்மீக குருவான சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் ஆசி வழங்கும் படம் இடம் பெற்றுள்ளது. இதோடு அரசியல் குருவான காமராஜரிடம் ரங்கசாமி ஆசி பெறுவது போலும், காமராஜரோடு இணைந்து நடந்து வருவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
"மக்களின் முதல்வர்", “எளிமையின் அடையாளம்”, “வரலாற்று நாயகர்" என்ற வாசகங்களுடன் ரங்கசாமி ஆட்சியின் மக்கள் நல திட்டங்களையும் புகழ்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். புதுச்சேரி நகரம் மட்டுமல்லாது புறநகர், கிராமங்கள் என முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்து பேனர்கள் நீக்கமற நிறைந்துள்ளது.