புதுவை அருகே ராட்சத கடல் அலையால் 11 வீடுகள் இடிந்து விழுந்தன

புதுவை அருகே ராட்சத கடல் அலையால் கடற்கரையில் இருந்த 11 வீடுகளை தண்ணீர் அடித்து சென்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்தன.
புதுவை அருகே ராட்சத கடல் அலையால் 11 வீடுகள் இடிந்து விழுந்தன
Published on

புதுவை அருகே தமிழக பகுதியில் பொம்மையார் பாளையம் என்ற மீனவ கிராமம் உள்ளது. இங்கு ஏற்கனவே கடல் அரிப்பு ஏற்பட்டு பல வீடுகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று மாலையில் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. ராட்சத அலைகள் ஊருக்குள் புகுந்தன. சுமார் 10 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் உள்புகுந்தது.

கடற்கரையில் இருந்த வீடுகளை தண்ணீர் அடித்து சென்றது. இதில், மீனவர்கள் குமார், அய்யனாரப்பன், அருள், குணாளன், சேகர், அரவிந்தன், பெருமாள், கோபால், ராமலிங்கம், சூராடி, இன்னொரு குமார் ஆகிய 11 பேர் வீடுகள் இடிந்து விழுந்தன.

கடற்கரையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்தன. ராட்சத அலைகள் கரையை நோக்கி வந்ததால் இந்த வீடுகளில் இருந்தவர்கள் ஏற்கனவே வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அவர்கள் உயிர் தப்பினார்கள்.

இதற்கிடையே இன்று அதிகாலை 3 மணியளவில் பாஸ்கர் என்பவர் பைபர் படகில் நித்தி என்பவர் உள்பட 4 பேர் மீன் பிடிக்க சென்றனர்.

கடற்கரையில் இருந்து 50 மீட்டர் தூரத்தை தாண்டி சென்றிருந்த நிலையில் ராட்சத அலையில் சிக்கி இந்த படகு கவிழ்ந்தது. இதில் நித்தி படுகாயம் அடைந்தார். அவர் உள்பட அனைவரும் நீந்தி கரைக்கு வந்தனர். காயம் அடைந்த அவரை காலாப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சிறிது நேரம் கழித்து படகு கரை ஒதுங்கியது. அப்போது படகின் என்ஜின் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. சுனாமி ஏற்பட்ட காலத்தில் கடற்கரை ஓரத்தில் பனை மரங்களை நட்டு தடுப்புகளை ஏற்படுத்தினார்கள்.

அதன் பக்கத்தில் கற்களை கொட்டுவதாக கூறி இருந்தனர். ஆனால், கற்கள் கொட்டாததால் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com