குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

காவேரிப்பாக்கம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
Published on

பனப்பாக்கம்:

காவேரிப்பாக்கம் ஒன்றியம் ஆயல் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு கடந்த 6 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நீண்டதூரம் நடந்து சென்று விவசாய கிணற்றில் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கக்கோரி டேங்க் ஆபரேட்டரிடம் பலமுறை முறையிட்டும், ஆயல் ஊராட்சி செயலாளர் மற்றும் காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் கிராம மக்கள் சார்பில் பலமுறை மனு கொடுத்தும் எந்த பயனும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை அம்பேத்கர் நகர் பஸ் நிறுத்தம் அருகே சோளிங்கர் செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முறையாக தங்கள் ஊருக்கு குடிநீர் வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால் பாணாவரத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமசேகரகுப்தா இங்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து போலீசார் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராமசேகரகுப்தா சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தினால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com