

பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமம் சரவணபுரம் ரோட்டில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் அன்னை வாட்டர் என்ற தனியார் குடிநீர் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. தற்போது கடும் வறட்சி நிலவி வரும் சூழலிலும் அந்த நிறுவனம் இயங்கி வரும் இடத்தில் 1,000 அடிக்கு மேல் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் எடுப்பதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் அந்த நிறுவனத்தின் அருகே உள்ள லாடபுரம் கிராம பொது குடிநீர் கிணற்றிலும் நீர்மட்டம் குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே அந்த தனியார் நிறுவனத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் லாடபுரம் கிராம இளைஞர்கள் மனு கொடுத்தனர். ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர்.
இந்த நிலையில் லாடபுரம் அம்பேத்கர் சிலை அருகே நேற்று அப்பகுதி பொதுமக்கள் ஒன்றுகூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சரவணபுரம் ரோட்டில் இயங்கி வரும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கேனில் அடைத்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜ்குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கியசாமி, பெரம்பலூர் தாசில்தார் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தனியார் குடிநீர் நிறுவனம் நிலத்தடி நீரை அதிகளவு உறிஞ்சி எடுப்பதால் விவசாய கிணறுகள் நீரின்றி வறண்டு விடும் சூழல் உள்ளது. குடிநீர் கிணற்றில் தண்ணீர் குறைந்து வருவதால் எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படலாம். எனவே விவசாய நிலங்களின் அருகேயுள்ள அந்த தனியார் குடிநீர் நிறுவனத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு சரவணபுரம் ரோடு பகுதிக்கு வந்த தாசில்தார் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி உள்ளிட்ட அதிகாரிகள் அந்த தனியார் குடிநீர் நிறுவனத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அந்த நிறுவனத்தில் போடப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றை பார்வையிட்டு எவ்வளவு அடிக்கு கீழ் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது என்பதை கேட்டறிந்தனர். மேலும் அந்த நிறுவனத்தின் அலுவலகத்திற்குள் சென்ற அதிகாரிகள் குடிநீர் நிறுவனம் செயல்படுவதற்கான உரிமம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்-தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்டவற்றின் சார்பில் வழங்கப்பட்ட அனுமதி சான்று உள்ளிட்டவற்றை கேட்டனர். அதற்கு நிறுவனத்தில் இருந்தவர்கள் உரிய பதில் தர மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து ஆவணங்களை எடுத்து வந்து சமர்ப்பிக்குமாறு அதன் உரிமையாளருக்கு தாசில்தார் உத்தரவிட்டார்.
இதற்கிடையே அந்த தனியார் குடிநீர் நிறுவனத்தின் அருகேயுள்ள லாடபுரம் பொது குடிநீர் கிணற்றின் நீரின் அளவு உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பார்வையிட்டனர். தனியார் குடிநீர் நிறுவனத்தில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆய்வின் முடிவில் அந்த தனியார் குடிநீர் நிறுவனத்தின் முன்பு நின்று கொண்டிருந்த மக்களிடம் அதிகாரிகள் கூறுகையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனத்திற்கு முறையான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து இன்னும் 15 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.