

பெரம்பலூர்:
பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளிலும், சாலையோரத்திலும் விளம்பர பதாகைகள் வைக்க தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் பெரம்பலூர் நகர் பகுதிகளான புதிய பஸ் நிலையம், பாலக்கரை ரவுண்டானா, ரோவர் ஆர்ச் வளைவு, சங்குப்பேட்டை காமராஜர் வளைவு, பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் இருபுறமும் பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக அனுமதியின்றி பல்வேறு அரசியல் கட்சியினர், திரைப்பட நடிகர்களின் ரசிகர்கள், தனியார் நிறுவனங்களின் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாலக்கரையில் உள்ள பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் சுற்றிலும் எவ்வித விளம்பர பதாகைகளும் வைக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக நுழைவு வாயில் அருகே பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், நகராட்சி, போலீசார் சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே பெரம்பலூர் மாவட்ட மைய தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் வருகிற 29-ந்தேதி பெரம்பலூரில் நடைபெறவுள்ளது என்பதற்காக, அந்த கூட்டம் வெற்றி பெற வாழ்த்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பில் பெரிய அளவிலான விளம்பர பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால், விளம்பர பதாகை வைக்கக்கூடாது என்று போலீசார் சார்பில் அறிவிப்பு பலகை வைத்துள்ள இடத்தின் அருகே வைத்து விட்டு சென்றுள்ளனர். அந்த விளம்பர பதாகையை அகற்றாமல் போலீசாரும் கண்டும், காணாமல் செல்கின்றனர். நேற்று காலை அந்த விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ள அருகே தான் சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் தொடங்கி வைத்தார். எனவே நகராட்சி நிர்வாகம் பெரம்பலூர் நகர் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பதாகைகளை அகற்றி, அதனை வைத்தவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.