

வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம் என். புகளுர் ஊராட்சி தவுட்டுப்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் 2015-2016 நிதியாண்டில் ரூ.17 லட்சம் செலவில் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. இச்சேவை மைய கட்டிடத்தில் இருந்து சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் பிறப்பு, இறப்பு சான்று ஜாதிச்சான்று, பட்டா நகல் உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றிதழ்களை பெறும் வகையில் பொதுமக்களின் நலன் கருதி இந்த சேவை மையம் கட்டப்பட்டது.
இந்நிலையில் இதுவரை பொதுமக்களின் பயன் பாட்டிற்கு இந்த சேவை மையம் திறந்து விடவில்லை. இதனால் என்.புகளுர் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த மோதுக்காடு தவுட்டுப்பாளையம், கட்டிப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்ளிட்டோர் பல்வேறு வகையான சான்றிதழ்களை அருகில் உள்ள சேவை மைய த்தில் பெற முடியாமல் வெகு தூரம் சென்று சான்றிதழ்கள் பெறவேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரியிடம் அப்பகு தியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை சேவை மையத்தை திறந்து வைக்கக்கோரி புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் விரைந்து நடவடிக்கை எடுத்து தவுட்டுப்பாளையத்தில் உள்ள பொதுசேவை மையக் கட்டிடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.