கொரோனா சிகிச்சை மையத்தை மாற்றக்கோரி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம்

ஸ்ரீரங்கம் அருகே கொரோனா சிகிச்சை மையத்தை மாற்றக்கோரி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ஸ்ரீரங்கம்:

ஸ்ரீரங்கம் காந்திரோடு கிழக்கு ரெங்கநாதபுரத்தில் உள்ள ஜி.வி.என். ஆஸ்பத்திரி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் அங்கு கொரோனா சிகிச்சை மையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று முன்தினம் இறந்ததையடுத்து அவரது உடலை சுமார் 10 நிமிடங்களாக சாலையில் வைத்திருந்து பின்னர் ஆம்புலன்சில் ஏற்றிய காட்சி வாட்ஸ் அப் மூலம் பரவியது. 

இதையடுத்து இங்குள்ள கொரோனா சிகிச்சை மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனக்கூறி அப்பகுதி பொதுமக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாலையில் அமர்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி ஆணையர் மணிகண்டன், இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார், தாசில்தார் ஸ்ரீதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின்போது, தாசில்தார் கோரிக்கையை மனுவாக எழுதி அதனுடன் நீங்கள் கூறும் புகார்களுக்கான ஆதாரங்களை இணைத்து வழங்குங்கள், அதனை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்து 2 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இப்பகுதியில் உடனடியாக தடுப்பு கம்பி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com